Thursday, February 4, 2010

ஆனால் இளம் தலைமுறையினர் மிகவும் கோபத்தோடும் ஆக்ரோசமாகவும் உலாவந்தனர். நான் பின்னர் நவசக்தி சனசமூக நிலையத்திற்கு சென்றேன். அங்கு ஏராளமான வாலிபர்கள்  ஒன்று கூடி இருந்தனர். அவர்களில் என்னுடன் பழக்கமான சிலரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்துகொண்டேன். விபரம் இதுதான்: சங்கானை நிற்சாமத்தில் நீறுபூத்துக் கொழுந்துவிட்டு எரிந்து
கொண்டிருந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதற்கு ஒருவர் முயற்சி எடுத்துள்ளார். அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போராட்டத்தை அடக்க முற்பட்டவர். சாதியமேலாதிக்க வெறியர்களின் தலைவனாகவும் அவர் இருந்திருக்கிறார்.

இவரை நன்கு அடையாளம் கண்டு கொண்ட நிச்சாம போராட்ட இளைஞர்கள் இவரைத் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டனர். அதற்காக அவரின் நடமாட்டத்தை உளவு பார்த்தனர் நிச்சாம போராளிகள். அவர்  ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கும், 7.30 மணிக்கும் மது அருந்துவதற்காக சண்டிலிப்பாய் மடத்தடிக்கு வருவதாகவும், பிற்பாடு நல்ல போதையில் 8.30க்கும் 9.30 க்கும் இடையில் திரும்புவதாகவும் கச்சிதமாக  தகவலை திரட்டிக் கொண்டனர். நேரமும் நெருங்கியது நிச்சாமப் போராளிகள் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்தனர். எதிர்பார்த்தபடி அந்த உருவத்தையும் கண்டு கொண்டனர். போராளி ஒருவரிடம் இருந்த துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா அவ்வுருவத்தை துளைத்து வீழ்த்தியது.

பிற்பாடுதான் தெரிந்து கொண்டனர் தாம் சுட்டு வீழ்த்தியது தாம் இலக்குவைத்த அந்த சாதிவெறியன் அல்ல என்பது. அவர்கள் எதிர்பார்த்த இடத்துக்கு இரண்டுபேர் வந்திருக்கின்றார்கள் இரண்டு பேரும் உருவ ஒற்றுமையிலும் மிக நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.  நிச்சாமப் போராளிகளின் இலக்குக் குள்ளானவர் தாம் எதிர்பார்த்தவரின் நண்பர் என்பதை அவர்கள் பிற்பாடே அறிந்துகொண்டார்கள். துப்பாக்கிச் சூடுபட்டவரும் இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியே சாதிவெறியர்கள் சண்டிலிப்பாய் மடத்தடிக் கிராமத்திலுள்ள குடிசைகளுக்கு நெருப்பு வைக்கக் காரணமும் ஆனது.  அதுவும் அதிகாலை 2.30 அல்லது 3 மணிபோல அது நடந்தது என்பதாகவும் அவர்கள் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறினர்.
       
1970 ம் ஆண்டுக்குப் பின்னர் நான் நவசக்தி சனசமூக நிலையத்தின் உறுப்பினராக சேர்ந்துகொண்டேன். காலப்போக்கில் மேற்படி சனசமூக நிலைய உபதலைவராகவும், பின்னர் செயலாளராகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தேன். இக்காலத்தில் நவசக்தி சனசமூக நிலையத்துக்கு அரச அங்கீகாரம் கிடைத்ததோடு, சிறியளவு அரச நிதி உதவியும் கிடைத்தது. என்னுடன் திரு.நா.கந்தையா, பி.கண்ணப்பு, வி.நடராசா, இரத்தினம் (ஆசிரியர்), க.இராசரத்தினம், க.இராசதுரை, காலம் சென்ற கனகராசா செல்வரத்தினம், மயில்வாகனம் போனற் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இச்சனசமூக நிலையத்தில் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து வந்தனர். என்பது பதிவு செய்யப்பட வேண்டிய  வரலாறாகும்.  நவசக்தி சனசமூக நிலையத்தின் தலைவராக திரு.நா.கந்தையா அவர்கள் பணிபுரிந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home